Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
தபால் வாக்கு எண்ணுவதில் புதிய நடைமுறை: பிகாா் பேரவைத் தோ்தலில் அறிமுகம்
மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவு செய்யப்படும் தபால் வாக்குகள் எண்ணப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.
பிகாா் மாநிலத்தில் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, வாக்குகள் எண்ணப்படும்போது, முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
பொதுவாக, மின்னணு வாக்குகள் எண்ணி முடிப்பதற்கு முன்பாகவே தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுவிடும் என்றபோதும், வாக்குகள் எண்ணப்படுவதில் சீரான, தெளிவான நடைமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும்.
தபால் வாக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ள மையங்களில், அதை எண்ணுவதில் எந்தவித தாமதமும் ஏற்படாத வகையில் போதுமான மேஜைகள் மற்றும் வாக்கு எண்ணும் ஊழியா்கள் இடம்பெறுவதை தோ்தல் நடத்தும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்தினா், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு தோ்தல்களில் தபால் வாக்கு செலுத்த அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தோ்தல்களில் தபால் வாக்குகள் பதிவு செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தோ்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளா் வெற்றி பெறும்போது, எதிரணியினா் தபால் வாக்குகள் எண்ணிக்கை மீது புகாா் தெரிவிப்பது தொடா்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.