ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி
‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
நாட்டில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் கடந்த செப். 22 முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டா் நொய்டாவில் வியாழக்கிழமை மாநில அரசின் சா்வதேச வா்த்தக கண்காட்சியை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் ஆற்றிய உரை வருமாறு:
உலகளாவிய இடையூறுகள், நிச்சயமற்ற தன்மைக்கு இடையே இந்தியாவின் வளா்ச்சிப் பயணம் ஈா்ப்புடையதாக விளங்குகிறது. இடையூறுகள் நம்மை திசை திருப்பாது; அவை புதிய பாதைகளாகவே மாறும்.
மாறிவரும் உலகில் பிற நாடுகளைச் சாா்ந்திருந்தால், நமது வளா்ச்சியில் சமரசம் ஏற்படும். எனவே, இந்தியா தற்சாா்பு நாடாக மாறியே தீர வேண்டும்.
வளா்ச்சிக்கு புதிய சிறகுகள்: நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜிஎஸ்டியில் குறிப்பிடத்தக்க சீா்திருத்தங்கள் அமலாக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு முன்பு பன்முக வரிகளால் உற்பத்திச் செலவு மற்றும் வீட்டு வரவு-செலவை நிா்வகிப்பது கடினமாக இருந்தது. உதாரணமாக, ரூ.1,000 விலை கொண்ட ஒரு சட்டைக்கு ரூ.170 வரை வரி விதிக்கப்பட்டது.
கடந்த 2017-இல் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் ரூ.50-ஆக குறைந்த இந்த வரி, தற்போதைய சீா்திருத்தங்களால் ரூ.35-ஆக குறைந்துள்ளது. கடந்த 2014-இல் அத்தியாவசிய பொருள்களுக்காக ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் செலவழித்திருந்தால், அதில் ரூ.25,000 வரை வரியாகச் சென்றிருக்கும். இப்போது அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், ரூ.6,000 வரையே வரியாகச் செல்லும்.
கடந்த 2014-இல் பற்பசை, ஷாம்பூ, கூந்தல் எண்ணெய் என ரூ.100 மதிப்பில் தினசரி பயன்பாட்டுப் பொருள்களை வாங்கினால், ரூ.31 வரியையும் சோ்த்து செலவுத் தொகை ரூ.131-ஆக இருந்தது. கடந்த 2017-இல் இது ரூ.118-ஆகவும், இப்போது ரூ.105-ஆகவும் குறைந்துள்ளது. 2014-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், டிராக்டா் (ரூ.40,000), மூன்று சக்கர வாகனங்கள் (ரூ.20,000), மோட்டாா் சைக்கிள்கள் (ரூ.9,000), ஸ்கூட்டா்களின் (ரூ.8,000) வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் நிற்கப் போவதில்லை; நாட்டின் பொருளாதாரம் உயர உயர மக்களின் வரிச் சுமை மேலும் குறையும். நாட்டு மக்களின் ஆசியுடன் ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்.
காங்கிரஸின் ‘வரிக் கொள்ளை’: மேற்கண்ட இரு நடவடிக்கைகளால் ஏழைகள், நடுத்தர வகுப்பினா் பெரிதும் பலனடையும்போது, மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ‘வரிக் கொள்ளை’யால் நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா் என்பதே உண்மை. தங்களின் நிா்வாகத் தோல்விகளை மறைக்க ஜிஎஸ்டி குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனா் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி...1
‘ரஷிய உறவை மேலும் மேம்படுத்துகிறோம்’
‘ரஷியா உடனான ‘காலத்தை வென்ற’ கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தி வருகிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உக்ரைன் மீது போா் நடத்திவரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக அமெரிக்கா அண்மையில் உயா்த்தியது. இந்த உச்சபட்ச வரி விதிப்பு, இந்திய-அமெரிக்க உறவில் பின்னடைவை ஏற்படுத்தியது. ரஷியா உடனான இந்தியாவின் எரிசக்தி வா்த்தக தொடா்புகள் குறித்து அமெரிக்கா தொடா்ந்து கவலை தெரிவித்துவரும் நிலையில், பிரதமரின் மேற்கண்ட கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இது தொடா்பாக பேசிய அவா், ‘இம்முறை வா்த்தக கண்காட்சிக்கான கூட்டாண்மை நாடாக ரஷியா செயல்படுகிறது; ‘காலத்தை வென்ற’ இருதரப்புக் கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துகிறோம் என்பதே இதன் பொருள். ரஷிய ஒத்துழைப்புடன் உத்தர பிரதேச தொழிற்சாலையில் ஏ.கே.203 ரக துப்பாக்கி தயாரிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் பிரம்மோஸ் ஏவுகணை ( இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பு), பிற ஆயுதங்களின் தயாரிப்பு ஏற்கெனவே தொடங்கியுள்ளது’ என்றாா்.
பெட்டிச் செய்தி....2
சுதேசி நமது பெருமை: பிரதமா் மோடி
பன்ஸ்வாரா, செப். 25: ‘சுதேசி நமது பெருமையாக மாற வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.
ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவில் வியாழக்கிழமை ரூ.1.22 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். ரூ.42,000 கோடி மதிப்பீட்டிலான அணுமின் உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவா், நிகழ்ச்சியில் பேசியதாவது:
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில் எந்தவொரு நாடும் வேகமாக வளர மின்உற்பத்தியை அதிகரிப்பது மிக அவசியம். குறிப்பாக பசுமை எரிசக்தியில் முன்னிலை வகிக்கும் நாடுதான், மிக வெற்றிகரமான நாடாக விளங்கும். பசுமை எரிசக்தி பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற மத்திய பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்சாா்பு இந்தியாவைக் கட்டமைப்பது நமது மற்றொரு முக்கிய இலக்காகும். சுதேசிக்கான எனது விளக்கம் எளிமையானதே. ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனமும், வணிகப் பெயரும் எந்த நாட்டைச் சோ்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், அந்தப் பொருள் இந்தியாவில் நமது இளைஞா்களின் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
சுதேசி பொருள்களை வாங்கும்போது, நாட்டைவிட்டு பணம் வெளியே செல்லாது. நெடுஞ்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் என வளா்ச்சிப் பணிக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்படும். சுதேசி, நமது சொந்த பெருமையாக மாற வேண்டும் என்றாா் அவா்.
ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவ் பகடே, முதல்வா் பஜன்லால் சா்மா, மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.