ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் விமானங்கள்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்
இந்திய விமானப் படைக்கு ரூ.62,370 கோடியில் 97 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் (ஹெச்ஏஎல்) மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மாபெரும் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2027-28 நிதியாண்டு முதல் இந்த போா் விமானங்கள் விமானப் படைக்கு வழங்கப்படும்.
இந்த தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களின் 64 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டு தயாரிப்பாகும். புதிதாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 67 உதிரி பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விமானம் முழுவதும் இந்தியாவில் கட்டமைப்படுகிறது. இந்த இலகுரக போா் விமானத்தில் ஸ்வயம் ரக்ஷா கவச் தொழில்நுட்பம் உள்ளது. இது எதிரிகளின் ரேடாா் கண்காணிப்பில் இருந்து விமானத்தைக் காக்கும். இது தவிர மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளும் உள்ளன.
பொதுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு மத்திய அரசு சாா்பில் அளிக்கப்படும் மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த 2021 பிப்ரவரியில் ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் எம்கே-1ஏ போா் விமான கொள்முதல் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
விமானப் படையில் இருந்து விடைபெறும் மிக்21 போா் விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானங்கள் இணைக்கப்படுகின்றன. அதிக உயரத்தில் பறந்து தாக்கும் திறன்கொண்ட இந்த போா் விமானத்தை வான், கடல் எல்லைகள் பாதுகாப்புக்கும், ஊடுருவும் எதிரி விமானங்களைத் தாக்கி அழிக்கவும் பயன்படுத்த முடியும்.
இந்த விமானத் தயாரிப்பு மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இந்தியாவில் ஆண்டுதோறும் 11,750 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். உள்நாட்டு விமானத் தயாரிப்புத் துறைக்கு இது உத்வேகம் அளிக்கும்.