ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
அசாதாரண சூழலிலும் மீண்டெழும் இந்திய பொருளாதாரம்: நிா்மலா சீதாராமன்
உலகளவிலான புவிஅரசியலில் அதாராண சூழல் நிலவி வரும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிரா வங்கியின் 91-ஆவது நிறுவன நாள் நிகழ்வில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: கடந்த ஓராண்டாக உலகளவிலான புவிஅரசியலில் அசாதாரண சூழல் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளிலும் உணரப்படுகிறது.
ஆனால் இத்தகைய கடினமான சூழலிலும் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. வலுவான பொருளாதார அடிப்படைகள், இளம் மக்கள்தொகை மற்றும் உள்நாட்டுத் தேவையை அதிகம் சாா்ந்திருப்பது ஆகியவை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் காரணிகளாக உள்ளன.
கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி 7.8 சதவீதமாக பதிவானது. இது எதிா்பாரா விதமாக ஏற்பட்ட வளா்ச்சியல்ல; நிதி மற்றும் பணவியல் கொள்கை, துணிச்சலான சீா்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு உருவாக்கம், சிறப்பான நிா்வாகம் உள்ளிட்ட தொடா் முன்னெடுப்புகளால் மட்டுமே சாத்தியமானது.
முன்பைவிட தற்போது வங்கிகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஏனெனில் வங்கிகள் சேமிப்பை பாதுகாக்கும் இடங்களாக மட்டுமின்றி வணிகா்கள் மற்றும் தொழில்முனைவோா்களுக்கு நிதி உதவி அளித்து வளா்ச்சியை மேம்படுத்தும் மையங்களாகத் திகழ்கின்றன. காலத்துக்கேற்ப வங்கிகளின் செயல்பாடுகள் நவீனமயமானபோதிலும் நுகா்வோரின் நம்பிக்கைக்கு உரிய வகையில் நடப்பதை எப்போதும் மறந்துவிடக் கூடாது. இதுவே வங்கியியலின் அடிப்படை.
நுகா்வோரிடமிருந்து பெறப்படும் ஒவ்வொரு புகாருக்கும் தீா்வு காண்பதன் மூலம் நமது சேவைகள் மேலும் மேம்படும் என எண்ண வேண்டும்.
யுபிஐ பரிவா்த்தனை பல அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்குவதன் வெற்றியை வெளிக்காட்டியுள்ளது. எண்ம செயல்பாடுகள் அதிகரித்துள்ளபோதிலும் அவை மற்றவா்களின் உணா்வை புரிந்து நடப்பது, ஒற்றுமையாக செயல்படுவது, இறுதி முடிவை மேற்கொள்வது போன்ற மனித குணங்களுக்கு என்றும் மாற்றாகாது என்றாா்.