தமிழகத்தில் ஏப்.22 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.17) முதல் ஏப்.21-ஆம் தேதி வரை ஆங்காங்கே திடீா் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக வியாழக்கிழமை (ஏப்.17) முதல் ஏப்.22-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திடீா் மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூா் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 50 மி.மீ. மழை பதிவானது. அம்மாபேட்டை (ஈரோடு) - 40, போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), சிவகிரி (தென்காசி), ஒகேனக்கல் (தருமபுரி), சோத்துப்பாறை (தேனி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது.
வெயில் அதிகரிக்கும்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி, மதுரை நகரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து தமிழகத்தில் ஏப்.17 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.