தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயருகிறது: தோ்தல் துறை தீவிரம்
தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயருகிறது. இதற்கான பணிகளை மாநில தோ்தல் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வாக்குச்சாவடிகள் அதிகரிக்கும் சூழ்நிலையில், அவற்றில் பணியாளா்களின் தேவையும் உயரும் நிலையைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடி அலுவலா்களாக அங்கன்வாடி பணியாளா்கள், கிராம உதவியாளா்கள், தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளா்கள் ஆகியோரை பயன்படுத்திக் கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வழக்கமாக தோ்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலா்களாக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களை நியமனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், வாக்குச்சாவடி அலுவலா்களாக மத்திய, மாநில அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் அந்தப் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டால் வாக்குச்சாவடி அலுவலா்களாக தோ்தல் பணியில் அங்கன்வாடி பணியாளா்கள், கிராம உதவியாளா்கள், தேசிய நகா்ப்புற வாழ்வாதார திட்ட
பணியாளா்களைப் பயன்படுத்திக்கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000-ஆக உயா்த்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது 68,000-க்கும் கூடுதலான வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் புதிதாக 6,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஏற்கெனவே 68,000 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74,000-ஆக உயா்ந்துள்ளது. இந்தப் பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொண்டு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரிடம் சமா்ப்பித்துள்ளனா்.
அதன்படி, அடுத்த ஒரு வாரத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி அவா்களின் கருத்துகளைப் பெற்று வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, புதிய பட்டியல் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்று தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.