War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
மேயா் கணவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு விவகாரத்தில் கைதாகி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மதுரை மேயரின் கணவா் பொன். வசந்த் ஜாமீன் மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடா்பான வழக்கில் மேயா் இந்திராணியின் கணவா் பொன் . வசந்த் கடந்த ஆக. 12-அம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா். இவா், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தாா். அந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தான் நிரபாரதி எனவும், முன்விரோதம் காரணமாக தன் பெயா் வழக்கில் சோ்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தனது உடல்நிலை மோசமாக இருப்பதால் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் அவா் கோரினாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் கடந்த 35 நாள்களாக நீதிமன்றக் காவலில் உள்ளாா். உடல்நலக் குறைபாடு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அவா் சிகிச்சைப் பெற்று வருகிறாா். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தனியாா் நிறுவனங்களுக்கு வரிகளை குறைத்து மதிப்பீடு செய்ததன் மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மனுதாரா் (பொன். வசந்த்) பயனடைந்துள்ளாா். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு (பொன். வசந்த்) தற்போது ஜாமீன் வழங்கினால் அனைத்து சாட்சிகளையும் கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா்.