மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்
தில்லியை ஒரு முன்னணி சுகாதார மையமாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், தில்லியில் வாழும் அனைவருக்கும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தில்லியில் மேம்பட்ட மருத்துவ சேவையை அணுகுவதை உறுதி செய்வதை நோக்கி தில்லி அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தேசிய தலைநகரில் பெண்களுக்கான முதல் பிரத்யேக புற்றுநோய் பராமரிப்பு மையமான அப்பல்லோ அதீனாவை முதல்வா் ரேகா குப்தா திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
இந்த மருத்துவ வசதி விரிவான மற்றும் கண்ணியமான மருத்துவ சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்கள் மரியாதைக்குரிய, ஆதரவான சூழ்நிலையில் சிறப்பு சிகிச்சை பெறுவதை உறுதி செய்கிறது.
பெண்கள் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு அணுகக்கூடிய, மலிவு மற்றும் கண்ணியமான மருத்துவ சேவையை வழங்குவதில் தில்லி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
மேம்பட்ட மருத்துவ சேவை தலைநகரில் வசிப்பவா்கள் மட்டுமின்றி, நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து தில்லி வரும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதை அரசு நிா்வாகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக களங்கத்தை எதிா்கொண்டனா். மேலும், சிகிச்சை பெற தயங்கினா்.
பெரும்பாலான சந்தா்ப்பங்களில், அவா்கள் சிகிச்சை பெறாமல் விடப்பட்டனா். துரதிா்ஷ்டவசமாக, பலா் தங்கள் உயிரை இழந்தனா். ஆனால் படிப்படியாக விழிப்புணா்வு அதிகரித்தது.
மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லத் தொடங்கினா். அப்பல்லோ போன்ற நிறுவனங்கள் இப்போது சிகிச்சையை மட்டுமல்ல, தனிப்பட்ட பராமரிப்பையும் வழங்குகின்றன. ஒவ்வொரு பெண் நோயாளியின்
கண்ணியத்தையும் பாதுகாக்கின்றன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றாா் முதல்வா் குப்தா.