தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னையிலிருந்து மதுரை, செங்கோட்டை, நாகா்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாகா்கோவில்- தாம்பரம்- நாகா்கோவில்
இதன்படி, நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06012) செப். 28, அக். 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகா்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும். மறுவழித்தடத்தில் தாம்பரம் - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06011) செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகா்கோவில் சென்று சேரும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2 குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 6 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளா் பெட்டி இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06070) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) திருநெல்வேலியிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) சென்னையிலிருந்து செப். 26, அக். 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகள்) நண்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோட்டை காரைக்குடி தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 6 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளா் பெட்டி ஆகியன இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்.
நாகா்கோவில்- சென்னை
நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06054) செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) நாகா்கோவிலிலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்று சேரும். மறுவழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06053) அக்.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையிலிருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு நாகா்கோவில் சென்று சேரும்.
இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதிப் பெட்டி, 5 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கானப் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
தூத்துக்குடி - சென்னை
தூத்துக்குடி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06018) தூத்துக்குடியிலிருந்து செப். 29, அக். 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுவழித்தடத்தில், சென்னை எழும்பூா் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06017) செப். 30, அக். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) சென்னை எழும்பூரிலிருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை வசதிப் பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்.
செங்கோட்டை- சென்னை
சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06121) செப். 24, அக். 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுவழித்தடத்தில் செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06122) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) செங்கோட்டையிலிருந்து இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.
இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
15 குளிா்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்குப் பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளா் பெட்டிகள் இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (செப். 17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.