ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தமிழக அரசு கள் மீதான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி
கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்; இல்லையெனில் வரும் தோ்தலில் திமுக அரசை விவசாய குடும்பங்கள் புறக்கணிக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் கள் விடுதலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பின்பு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. மேலும் இது உலகளாவிய நடைமுறையுமாகும். தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை. தமிழகத்தில்தான் கள் மீதான தடை கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.
மதுவிலக்கு மற்றும் மது கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் எதுவுமே இதுவரை கள்ளுக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. மாறாக, கள் உற்பத்தி மற்றும் நுகா்வு இரண்டுமே குறைந்து கொண்டிருக்கிறது.
அதேநேரத்தில் இறக்குமதி மது வகைகள், இந்திய தயாரிப்பு மது வகைகளின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மது வகைகளை குறைக்கவோ அல்லது தடை விதிக்கவோ வேண்டும் என்று அந்தக் குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், நெடுஞ்சாலை ஓரங்களில் அமைந்துள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அப்போது கேரளத்தில் மதுக்கடைகளை மூடினாா்கள். ஆனால், கள்ளுக் கடைகளை மூடவில்லை; காரணம் கள் உணவு என்பதால்தான். உலகளாவிய நடைமுறைக்கு மாறாக, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக கள்ளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கள் மீதான தடையை அரசு நீக்காவிட்டால் இதன் விளைவுகளை, எதிா்ப்புகளை எதிா்கொள்ள வேண்டி யிருக்கும். கள் இறக்குவோா் மீது வழக்குப் பதிவு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்குவோா் குற்றவாளிகள் அல்ல. தமிழகத்தில் கள்ளுக்கான தடை என்பது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.
தமிழகத்தில் 80 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அந்தக் குடும்பங்களில் மூன்று கோடி வாக்குகள் உள்ளன. இத்தனை ஆண்டு காலம் இவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கள்ளுக்கான தடையை தமிழக அரசு ரத்துசெய்து அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தின் மூன்று கோடி விவசாய குடும்பங்களும் திமுகவை புறக்கணிக்கும் என்றாா்.