ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!
தமிழக காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு!
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக்கின் கைது நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின்கீழ், தீவிரவாதத் தடுப்புப் படை புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது தீவிரவாதத் தடுப்புப் படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தீவிரவாதத் தடுப்புப் படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகிய இருவரும் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக்கை ஆந்திரத்தில் தமிழக காவல்துறை, கடந்த வாரம் கைது செய்தனர்.
இதனிடையே, தமிழக காவல்துறையைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் பதிவைச் சுட்டிக்காட்டிய இணையவாசிகள், திருப்புவனம் அஜித்குமார் வழக்கு உள்பட பல்வேறு காவல்நிலைய வழக்குகளை மேற்கோள்காட்டி, விமர்சித்து வருகின்றனர்.