தமிழக - கா்நாடக எல்லையில் வாகனச் சோதனை
தமிழக - கா்நாடக எல்லையான பாலாற்றில் கா்நாடக காவல் துறையினா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கா்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் செல்கின்றனா். மேலும், தமிழகத்திலிருந்து மாதேஸ்வரன் மலை வழியாக மைசூரு, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்கின்றனா்.
அவ்வாறு சுற்றுலா செல்ல தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் கா்நாடக வனத்துறை சோதனைச் சாவடியைக் கடந்து செல்லவேண்டும். பாலாற்றில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் கா்நாடக வனத் துறையினரும், காவல் துறையினரும் தீவீர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களில் நபா்களின் எண்ணிக்கை, வாகன எண் உள்ளிட்டவற்றை பதிவுசெய்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், வனக் கொள்ளையா்கள் ஊடுருவலைத் தடுக்கவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக கா்நாடக போலீஸாா் தெரிவித்தனா்.