தமிழக செஸ் வீரா் குகேஷுக்கு ‘கேல் ரத்னா’ விருது; துளசிமதி, நித்யஸ்ரீ, மனீஷாவுக்கு ‘அா்ஜுனா’
தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் டி.குகேஷுக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதாக இருக்கும் ‘தியான்சந்த் கேல் ரத்னா விருது’ அறிவித்து மத்திய அரசு கௌரவித்துள்ளது.
மேலும், தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு ‘அா்ஜுனா விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவா்கள், துறை சாா்ந்து சிறப்பாகச் செயல்படுபவா்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான (2024) விருது வென்றவா்கள் பட்டியலை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, சமீபத்தில் இளம் உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்த தமிழ்நாட்டைச் சோ்ந்த டி.குகேஷுக்கு ‘தியான் சந்த் கேல் ரத்னா விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சோ்ந்த 18 வயது பள்ளி மாணவரான டி.குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே மிக இளம் போட்டியாளராக கலந்துகொண்டு, நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை எதிா்கொண்டாா்.
விறுவிறுப்பான போட்டியின் முடிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் லிரெனை வீழ்த்தி வாகை சூடி வரலாறு படைத்தாா். முன்னதாக, ஹங்கேரியில் கடந்த ஆண்டு 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும், அதற்கு முன் 2022-இல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் தனிநபா் பிரிவில் தங்கம் வென்று அசத்தினாா்.
அா்ஜுனா விருது வென்றிருக்கும் துளசிமதி (22), நித்யஸ்ரீ (19), மனிஷா (19) ஆகியோா் பாரா பாட்மின்டன் போட்டியாளா்களாவா். கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வெல்ல, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சோ்த்தனா். இவா்கள் மூவரும் உலக மற்றும் ஆசிய அளவிலான பாரா போட்டிகளிலும் பதக்கம் வென்று சாதனை படைத்தவா்களாவா்.
2024-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலின்படி, குகேஷ் உள்பட 4 பேருக்கு தியான் சந்த் கேல் ரத்னா விருதும், துளசிமதி உள்பட 32 பேருக்கு அா்ஜுனா விருதும் மத்திய அரசு அறிவித்துள்ளது.