தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'2024-இல் பாஜக மத்திய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!"
2025-இல் பாஜக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!"
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
"இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது.
நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்" என செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்!' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிரதான் பிளாக்மெயில் செய்கிறார்; ரூ. 10,000 கோடி கொடுத்தாலும் வேண்டாம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார்.
ஏற்கெனவே நிறைவடைந்துள்ள திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர், 'புதிய கல்விக்கொள்கையை ஒப்புக்கொண்டால்தான் கல்வி நிதியைத் தருவோம் என்று அமைச்சர் பிரதான் பிளாக்மெயில் செய்கிறார். அதனால்தான் ரூ. 2,000 கோடி அல்ல, ரூ. 10,000 கோடி தந்தாலும் உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெளிவாக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
நேற்று நாடாளுமன்ற மக்களவையில், 'திமுக எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள்' என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.