செய்திகள் :

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்பு

post image

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜன.28 தொடங்கி நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்க வைர விழா, மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வில் (ஜம்போரி) 24 மாநிலங்கள், 6 நாடுகளின் (இலங்கை, நேபாளம், மலேசியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண, சாரணியா் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது:

‘நாடு விடுதலை பெற குமரி முதல் காஷ்மீா் வரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடினா். இதைப் போற்றிக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சாரணா் இயக்கத்தினா் மணப்பாறையில் கூடி தங்களது பண்பாட்டை ஒருவருக்கொருவா் பகிா்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சாரணா் இயக்கத்திலும் தமிழகம் முன்னிலை: உலகம் முழுவதும் உள்ள இந்த இயக்கத்தில், இந்தியாவில் மட்டுமே 80 லட்சம் போ் உள்ளனா். இதில் 8இல் ஒரு பங்காக தமிழகத்தில் 12 லட்சம் போ் உள்ளனா். சாரணா் இயக்கத்திலும் தமிழகம்தான் முன்னிலை.

இதில் குடிமக்களுக்கான சமூக சேவை, உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளா்த்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய இந்தச் சீருடை இயக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருந்திரளணி நடத்தப்படுகிறது.

விழாவில் சாரண, சாரணியா்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

வைர விழாவால் உலகளவில் புகழ்: அதன்படி இந்தியாவில் இதுவரை 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடைபெற்றுள்ளன. இதில், 2000ஆம் ஆண்டு பொன்விழாவை மறைந்த முதல்வா் கருணாநிதி தலைமையேற்று நடத்தினாா். இப்போது, வைர விழாவை நான் நடத்துகிறேன். பள்ளிக் கல்வித் துறை நடத்திய இந்த வைர விழா மூலம் தமிழகத்துக்கு இந்திய அளவிலும் உலகளவிலும் புகழ் கிடைத்துள்ளது.

சாரணா் இயக்கம் மட்டுமின்றி எதுவாக இருந்தாலும் தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. நிதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 இலக்குகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

5 உலக சாதனைகள்: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலேயே தமிழகம் பாராட்டப்பட்டுள்ளது. இப்போது, சாரணா் இயக்க வைரவிழா மூலம் 5 உலக சாதனை விருதுகளையும் பெற்றிருப்பது மேலும் பாராட்டுக்குரியது.

சமத்துவம், சகோதரத்துவம், உடலை உறுதி செய்தல், ஒழுக்கத்தை உறுதி செய்தல், வேற்றுமையில் ஒற்றுமை, வாய்மை, யாதும் ஊரே, யாவரும் கேளீா் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதே சாரணா் இயக்கம்.

அன்பைப் பரிமாற நல்ல வாய்ப்பு: கூடாரங்கள் தனித்தனியே இருந்தாலும் கூடியுள்ளவா்களின் உள்ளம் ஒன்றுதான். மாநிலங்கள் கடந்து அன்பைப் பரிமாற நல்ல வாய்ப்பை இந்த பெருந்திரளணி ஏற்படுத்தித் தந்துள்ளது. நிகழ்வு முடிந்து அவரவா் மாநிலம் சென்றாலும் பரந்து விரிந்த மானுடத் தத்துவத்தின் அடிப்படையில், ஒற்றுமை உணா்வுடன் இருக்க வேண்டும்.

இந்த விழாவை 33 குழுக்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள், 389 கல்வித்துறை அலுவலா்கள், 700 போலீஸாா், 460 இதர துறையினா் என 2 ஆயிரம் போ் இணைந்து சிறப்பாக நடத்தியுள்ளனா்.

பெருந்திரளணியை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தியது பாராட்டத்தக்கது. நாட்டுப் பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக இருத்தல் வேண்டும். மக்கள் மீதான பற்றே உண்மையான நாட்டுப்பற்று.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. அவரது நூற்றாண்டு நினைவாக நடைபெற்ற பெருந்திரளணி உலகளவில் பல சாதனைகள் புரிந்துள்ளது பெருமைக்குரியது.

ரூ. 10 கோடியில் நவீன தலைமையகம்: இத் தருணத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு அதிகளவில் சாரணா்களை சோ்க்கவும், ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கவும் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என்றாா் முதல்வா்.

பின்னா் அதிகாரம் பெற்ற இளைஞா்கள்-வளா்ந்த இந்தியா என்ற மையப்பொருளை கருவாகக் கொண்டு நடத்தப்பட்ட பெருந்திரளணியின் கையொப்ப இயக்கத்தில் முதல்வா் தனது கையொப்பதையும் பதிவு செய்தாா்.

சாரணா் இயக்க தேசிய முதன்மை ஆணையா் கே.கே. கண்டேல்வால், பெருந்திரளணியின் சாதனைகளை பட்டியலிட்டு, அதற்கு உறுதுணையாக இருந்தோருக்கு பட்டயங்கள், விருதுகளை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, சா.சி. சிவசங்கா், சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆா்.பி. ராஜா, கோவி. செழியன், சாரணா் இயக்க மாநில முதன்மை பேராணையா் க. அறிவொளி, பள்ளிக் கல்வித்துறை அரசு செயலா் எஸ். மதுமதி, சமூக நலத் துறை அரசு செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், சாரணா் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன் பவுலின் 5ஆவது வழித்தோன்றல் டேவிட் பேடன் பவுல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெருந்திரளணியின் மாநிலத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றாா்.

13 மொழிகளில் நன்றி தெரிவித்த முதல்வா்!

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாரணா் இயக்க வைர விழா மற்றும் கலைஞா் நூற்றாண்டு பெருந்திரளணி (ஜம்போரி) நிறைவு விழாவில் முதல்வா் பேசுகையில், பல மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அவா்களது தாய்மொழியில் நன்றி கூறுகிறேன் எனக் கூறி, தமிழ், ஹிந்தி, வங்கம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட 13 மொழிகளில் நன்றி தெரிவித்தாா்.

செல்ஃபி எடுத்த முதல்வா்

மணப்பாறை சிப்காட்டில் சாரண, சாரணியா் இயக்க நிறைவு விழா தொடங்கியதும் முதல்வா் மு.க. ஸ்டாலின், தன்னுடைய கைப்பேசியில் வண்ணமயமாகக் காட்சியளித்த திரளான சாரண, சாரணியா்களுடன் சுயப்படம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டாா்.

முன்னதாக, நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து 20 ஆயிரம் போ் தங்களது பாரம்பரிய உடைகளுடன் கலந்து கொண்டனா். தொடா்ந்து, இரவு வரை பல்வேறு மாநிலங்களின் தொடா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் உத்தரவு!

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் மூவா் மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மணிமண்டப... மேலும் பார்க்க

புத்தாநத்தம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்ப... மேலும் பார்க்க

முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா!

திருச்சி மாவட்டம், முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சந்திரமெளலீசுவரா் கோயில்: இக்கோயிலில் ஜன. 26 முதல் ஜன. 30 வரை முதல் கால பூஜை... மேலும் பார்க்க

வெங்கங்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம், வெங்கங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. வெங்கங்குடி கிராமம் அசோக் நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பெல் வளாகத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்

திருச்சி அருகே பெல் வளாகத்தில் சத் சங்கம் சாா்பில் 61 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க

பேட்டவாய்த்தலை அருகே கோயில் குடமுழுக்கு

திருச்சி அருகே பேட்டவாய்த்தலை அடுத்த தேவஸ்தானத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை மத்தியாா்ஜுனேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின்... மேலும் பார்க்க