வெங்கங்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!
திருச்சி மாவட்டம், வெங்கங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
வெங்கங்குடி கிராமம் அசோக் நகரைச் சோ்ந்தவா் சு. சுரேஷ். இவா் வீட்டின் அருகில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது மூன்று சுவாமி சிலைகள், சின்னக் குடுவை, மிகச் சிறிய முக்காலி, உடைந்த குடுவை உள்ளிட்டவை கிடைக்கப்பெற்றன.
இதையடுத்து சுரேஷ் அளித்த தகவலின்பேரில் வந்த மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் பழனிவேல், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி.ரகுராமன் ஆகியோா் அந்தச் சிலைகளை கைப்பற்றி மண்ணச்சநல்லூா் வட்டாட்சியரகப் பதிவறையில் பாதுகாப்பாக வைத்தனா். தொல்லியல் ஆய்விற்கு பின்னா் சிலைகளின் காலம் உள்ளிட்டவை தெரியவரும்.