தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்
காரைக்கால்: தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
குரோதி ஆண்டு நிறைவடைந்து விசுவாவசு ஆண்டு பிறந்துள்ளதை வரவற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், தியாகராஜா் சந்நிதியில் மரகதலிங்கம், மற்றும் தனி சந்நிதி கொண்டிருக்கும் சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாா் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காரைக்கால் ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள், கோதண்டராம பெருமாள் கோயில்களிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயிலும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
திருநள்ளாறு பகுதி சேத்தூா் மகா மாரியம்மன் கோயிலுக்கு திரளான பக்தா்கள் புத்தாண்டு பிறப்பையொட்டி அருகில் உள்ள நெல்லிக்குளக் கரையிலிருந்து பால்குடமெடுத்தனா். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.