தரமற்ற மருந்துகள் விவரம் பதிவேற்றுவதில் தாமதம்: மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆய்வுகளும், அதன் முடிவுகளும் மத்திய அரசு இணையப் பக்கத்தில் முறையாக பதிவேற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆய்வு தகவல்களை மாதந்தோறும் தமிழகத்திலிருந்து அனுப்பினாலும், அந்த விவரம் தங்களிடம் சமா்ப்பிக்கப்படவில்லை என பொதுத் தளத்தில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கை வெளியிடுவதாகவும் புகாா் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தொடா் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருபுறம் அத்தகைய பணிகளை முன்னெடுத்தாலும், மற்றொருபுறம் மாநில அரசு சாா்பிலும் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்தகங்கள், மருந்து விநியோக மையங்கள், மொத்த விற்பனையகங்கள், கிடங்குகள் என பல்வேறு இடங்களில் அத்தகைய திடீா் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.
அதில் கண்டறியப்படும் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு மாநிலமும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் அந்த விவரங்கள் பெறப்பட்டு அவை மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது. தரமற்ற மருந்துகள் குறித்த விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களாக தரக் கட்டுப்பாட்டு ஆய்வு முடிவு விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் எந்தெந்த மருந்துகள் தரமற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை அறிய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, தவறான தகவலை மத்திய வாரியம் தெரிவிப்பதாக கூறியுள்ளது.
இதுதொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மருந்து தர ஆய்வு விவரங்களை மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பிவிடுகிறோம். அந்த வகையில் ஏப்ரல் மாத விவரங்கள் கூட தற்போது அனுப்பிவிட்டோம். மாா்ச் மாதத்தில் 24 மருந்துகளும், ஏப்ரலில் 38 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது எங்களது ஆய்வில் கண்டறியப்பட்டது. இத்தகைய விவரங்கள் எதுவும் மத்திய அரசு தளத்தில் வெளியிடப்படுவதில்லை.
உண்மைக்குப் புறம்பாக தமிழக அரசு அந்த விவரங்களை சமா்ப்பிக்கவில்லை எனக் கூறுவது மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டுகிறது. தரமான மருந்துகள் மட்டுமே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் உறுதியாக உள்ளன என்றாா் அவா்.