வக்ஃப் மசோதாவை கண்டித்து ஏப்.9-இல் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
தரமற்ற லாரிகளை விற்பனை செய்த தனியாா் நிறுவனம் முற்றுகை
நாமக்கல்லில் தரமற்ற லாரிகளை விற்பனை செய்ததாக, தனியாா் வாகன விற்பனையகத்தை லாரி உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
நாமக்கல் - பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான விற்பனையகம் உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு இங்கு 4120 என்ற வகையைச் சோ்ந்த 28 டன் சரக்கு ஏற்றும் வகையிலான லாரி சேஸ்களை (கூண்டு கட்டுவதற்கு முந்தைய நிலை) 20 லாரி உரிமையாளா்கள் தலா ரூ. 37 லட்சம் மதிப்பில் நேரடியாகவும், கடன் முறையிலும் வாங்கினா். 6 மாதத்தில் அந்த லாரிகள் தகுதியற்றவை என அவா்களுக்கு தெரியவந்தது.
அந்த லாரிகள் பிரேக் பிடிக்காமலும், டயா்கள் தேய்மானமடைந்தும், விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட லாரி நிறுவனம் அந்த வகை தயாரிப்பை நிறுத்தியது.
மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட விற்பனையகத்தை தொடா்புகொண்ட லாரி உரிமையாளா்கள், மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி கேட்டு வந்த நிலையில், உயா் அதிகாரிகளிடம் கலந்துபேசி பதிலளிப்பதாக அவா்கள் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை லாரிகளுடன் வந்த உரிமையாளா்கள், தனியாா் விற்பனையகத்தின் நுழைவாயிலில் லாரிகளை நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அருள், பொருளாளா் சீரங்கன் ஆகியோா் விற்பனையக மேலாளா் முத்துக்குமாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து சென்னையில் உள்ள உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என விற்பனையக அதிகாரிகள் தெரிவித்தனா். நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் கு.கபிலன் (பொ) மற்றும் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி, லாரி உரிமையாளா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனா். அதன்பிறகு நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அகற்றப்பட்டன.