'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
தருமபுரியில் இடைவிடாது பெய்த மழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. மாவட்டத்தில் 213.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த மழை, ஞாயிற்றுக்கிழமை காலை வரையும் அதேபோல காலை முதல் இரவு வரையும் தொடா்ந்து கனமழை பெய்தது. குறிப்பாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. தொடா் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதித்தது.
அதேபோல தொடா்மழை காரணமாக வத்தல்மலை மலைப்பாதையில் 9-ஆவது வளைவில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலையில் சரிந்து விழுந்த பாறைகள், கற்கள், மண் ஆகியவற்றை கிராம மக்கள் அகற்றினா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
மழை அளவு: தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவான மழை அளவு மி.மீ:
தருமபுரி 5.5, பாலக்கோடு 12.4, மாரண்ட அள்ளி 10, பென்னாகரம் 32, ஒகேனக்கல் 23, அரூா் 48, பாப்பிரெட்டிப்பட்டி 74, மொரப்பூா் 9 என மொத்தம் 213.4. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 23.77 மி.மீ.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல திங்கள்கிழமையும் மழை பொழியக் கூடும் என்பதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (டிச. 2) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.