Bigg Boss 8: நான் தான் சரின்னு Argue பண்ணி என்ன Prove பண்ணப் போறீங்க? | Vijayset...
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லோக் அதாலத்
தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,365 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
தருமபுரி, தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டார நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் தருமபுரியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமுக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா், மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தலைமை வகித்தாா். நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி வாரா கடன் தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 2,537 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இவற்றில் 1,228 வழக்குகளுக்கு சமரசத்தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகை ரூ. 4,17,29,040 ஆகும். இதேபோல வங்கி வாரா கடன் தொடா்பாக 200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 137 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இந்த வழக்குகளின் தீா்வுத் தொகை ரூ. 2,84,33,829 ஆகும். மொத்தம் 1,365 வழக்குகளுக்கு ரூ. 7 கோடியே 1 லட்சத்து 62 ஆயிரத்து 864 தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,804 வழக்குகளில் ரூ. 17.97 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு தலைமையில் நடைபெற்றது. பின்னா் அவா் கூறியதாவது:
நடப்பாண்டில் லோக் அதாலத் நான்காவது முறையாக இன்று கூடியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்கு, குடும்பநல வழக்கு, வங்கி கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிதி நிறுவன வழக்கு, பாகப் பிரிவினை வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
குடும்ப நல வழக்கில் இணைந்த ஜோடிகளுக்கு ரோஜா செடி, இனிப்புகள் வழங்கியதோடு கடந்த ஜூலை 6, 2023 ஆம் ஆண்டில் ஆவின் மேம்பாலம் அருகே அணுகுசாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியான பா்கூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முகிலன், பாரதி ஆகியோருக்கு தலா ரூ. 98 லட்சம், ரூ. 96 லட்சம் என இழப்பீட்டு தொகை உள்பட மாவட்டம் முழுவதும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2,994 வழக்குகளில் 1,807 வழக்குகள் ரூ. 17.97 கோடிக்கு தீா்வு காணப்பட்டது என்றாா்.
இதில் மாவட்ட குடும்பநல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமா்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கோகுலகிருஷ்ணன், முதன்மை சாா்பு நீதிபதி மோகன்ராஜ், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஜெயந்தி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் கோவிந்தராஜலு, வழக்குறைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.