தலைமறைவாக இருந்த பி.ஏ.சி.எல் இயக்குநர் கைது - 5 கோடி மக்களிடம் ரூ.49,000 கோடி மோசடி செய்தது எப்படி?!
இந்தியாவில் அதிக வட்டி தருவதாக கூறி முதலீடுகளை பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் எத்தனையோ நடந்துள்ளது. அதில் மிகவும் முக்கியமானது பி.ஏ.சி.எல் அக்ரோ டெக் கார்ப்ரேசன் செய்த மோசடியாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மோசடியாக கருதப்படும் இந்த மோசடியில் 49 ஆயிரம் கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர்.
நாடு முழுவதும் நிலம் வழங்குவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் கூறி இந்நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்தது. இதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதியும் பெறவில்லை. ஆரம்பத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குர்வந்த் அக்ரோடெக் லிமிடெட் என்ற பெயரில் இக்கம்பெனியை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நிர்மல் சிங் என்பவர் தொடங்கினார். பின்னர் அதனை PACL என்று மாற்றி அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றினர்.
உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கேரளா, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளை தொடங்கி ஏஜெnட்களை நியமித்தனர்.

கவர்ச்சிகரமாக கமிஷனை கொடுத்தனர். ஒவ்வொரு ஏஜென்டும் தலா இரண்டு பேரை நியமிக்கவேண்டும் என்று கூறினர். பிரமிட் முறையில் ஏஜெண்ட்கள் நியமிக்கப்பட்டனர். முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நிலம் அல்லது அதிக வட்டி கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். ஆரம்ப காலத்தில் முதலீட்டாளர்களுக்கு மற்ற முதலீட்டாளர்களிடமிருந்து பணம் வாங்கி அதிக வட்டி கொடுத்தனர்.
இத்திட்டம் குறித்து செபிக்கு 1999-ம் ஆண்டே தெரிய வந்தது. இது குறித்து விபரங்களை தெரிவிக்கும்படி செபி நிர்வாகம் கம்பெனிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு வரை பி.ஏ.சி.எல் நிர்வாகம் கோர்ட் மூலம் தங்களது திட்டங்களை நியாயப்படுத்தி வந்தது. அதேசமயம் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை கம்பெனி நிர்வாகம் நிறுத்தவேயில்லை.
பணத்தை வாங்கிய 90 முதல் 270 நாட்களில் முதலீட்டாளர்கள் பெயரில் நிலம் பதிவு செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் பெயரில் நிலமே கிடையாது. முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணத்தில் கமிஷன் தொகை போக எஞ்சிய பணத்தை ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். 2015ம் ஆண்டு முதலீட்டாளர்களிடம் வாங்கிய பணத்தை மூன்று மாதத்தில் திரும்பி கொடுக்க வேண்டும் என்று பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் பணம் திரும்ப கொடுக்கப்படவில்லை. இதையடுத்து இது குறித்து சி.பி.ஐ, மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரிக்க ஆரம்பித்தது. விசாரணையில் 5.5 கோடி மக்களிடம் 49 ஆயிரம் கோடியை வசூலித்தது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் மொத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் கம்பெனியை ஆரம்பித்த நிர்மல் சிங் இறந்து போனார்.
அதனை தொடர்ந்து அவரது மருமகன் பால் சிங் ஹயர் கம்பெனியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இக்கம்பெனியில் குர்னம் சிங் என்பவரும் இயக்குனராக இருந்தார். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் மாநிலம் ரோபர் என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
பி.ஏ.சி.எல் நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 50 லட்சம் பேரிடமிருந்து 19 ஆயிரம் கோடியை இந்நிறுவனம் வசூலித்துள்ளது. இதையடுத்து உத்தரப்பிரதேச குற்றப்பிரிவு போலீஸாரும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி நீரா ராவத் கூறுகையில், ''கைது செய்யப்பட்டுள்ள குர்னம் சிங் 1998ம் பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் இயக்குனராக சேர்ந்தார். ஆரம்பத்தில் முதலீட்டாளர்களுக்கு வட்டியை சரியாக வழங்கினர். அதோடு ஏஜென்ட்களுக்கு அதிக கமிஷன் கொடுத்தனர். முதலீட்டாளர்களை கவர நாடு முழுவதும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தினர்''என்றார்.
யார் இந்த நிர்மல் சிங்?
பஞ்சாப் மாநிலம் பர்னாலாவை சேர்ந்த நிர்மல் சிங் கல்லூரியில் படித்துக்கொண்டே தனது சகோதரனுடன் சேர்ந்து பால் வியாபாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து கொல்கத்தா சென்று தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அந்நிறுவனமும் பொதுமக்களை ஏமாற்றிவிட்டது. கம்பெனியும் மூடப்பட்டது. அதில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி நிர்மல் சிங் 1983ம் ஆண்டு தனது சொந்த நிதி நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அவர் இந்தியா முழுக்க கிளைகளை தொடங்கி ரூ.49 ஆயிரம் கோடியை வசூலித்து மோசடி செய்துவிட்டார். தற்போது அந்நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. நாடு முழுவதும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.