தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரை கைது செய்த பாகிஸ்தான்: விடுவிக்க பேச்சுவாா்த்தை
பஞ்சாப் எல்லைப் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவரை பாகிஸ்தான் படையினா் கைது செய்தனா். அவரை விடுவிக்க பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஞ்சாபின் ஃபெரோஸ்பூா் எல்லையில் இச்சம்பவம் நடந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் 182-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த பி.கே.சாஹு என்ற வீரா், தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்கு புதன்கிழமை சென்றுவிட்டாா். துப்பாக்கியுடன் சீருடையில் இருந்த அவரை பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படையினா் கைது செய்துள்ளனா். அவரை விடுவிக்க பாகிஸ்தான் தரப்புடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்று பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுபோல் தவறுதலாக எல்லை தாண்டும் இரு நாட்டு வீரா்கள், பேச்சுவாா்த்தைக்குப் பின் விடுவிக்கப்படுவது சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. தற்போது பஹல்காம் தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கு எதிராக இந்தியா பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உருவாகியுள்ளது. இதுபோன்ற சூழலில், பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் படையினா் கைது செய்துள்ளனா்.