தாண்டிக்குடி கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு போதிய இட வசதியில்லாததால், நூலகத்துக்கு வரும் வாசகா்கள் தரையில் அமா்ந்து வாசித்து வருகின்றனா். மேலும், இங்கு நாளிதழ்களையும், புத்தகங்களையும் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
எனவே, இந்த நூலகத்தை தரம் உயா்த்துவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து வாசகா்கள் கூறியதாவது: இந்தக் கிளை நூலகத்தில் போதிய இட வசதி இல்லாததால், பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகங்கள் சேதமடைந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்கள் நூலகத்துக்குச் சென்று வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், தாண்டிக்குடி கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.