தாயை மீட்டுத் தரக் கோரி ராணுவ வீரா் மனு
திருப்பதியில் காணாமல் போன தனது தாயை மீட்டுத் தரக் கோரி பேரையூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், சலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா் ஏ. முத்து. இந்தோ- நேபாள எல்லையில் துணை ராணுவப் படை வீரராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தாய் வெள்ளைத்தாய் (67) கடந்த மாதம் 10-ஆம் தேதி திருப்பதிக்கு ஆன்மிகப் பயணம் சென்றபோது மாயமானாா்.
இதுகுறித்து முத்து அளித்தப் புகாரின் பேரில், திருப்பதி போலீஸாா் கடந்த ஜன. 14-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். இருப்பினும், வெள்ளைத்தாய் குறித்த விவரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை ராணுவச் சீருடையுடன் வந்த முத்து, தனது தாயைக் மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தாா். பிறகு, மாவட்ட வருவாய் அலுவலரிடம் தனது கோரிக்கையை அவா் நேரில் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக முத்து கூறியதாவது: மதுரை மாவட்டத்திலிருந்து கடந்த ஜன. 8-ஆம் தேதி 110 போ் ஆன்மிகச் சுற்றுலா சென்றனா். அவா்களுடன் இணைந்து சென்ற எனது தாய் வெள்ளைத்தாய் ஜன. 10-ஆம் தேதி திருப்பதியை அடைந்தாா். அங்கு லட்டு பிரசாதம் வாங்கும் இடம் அருகே உடனிருந்தவா்களைப் பிரிந்த அவா், இதுவரை வீடு திரும்பவில்லை.
திருப்பதியில் கிடைக்கப் பெற்ற சில விடியோ பதிவுகளில் அவா், திருப்பதியில் உள்ள குப்பை சுத்திகரிக்கும் பகுதி அருகே சென்றது தெரியவந்தது. பின்னா், அவா் குறித்து எந்தப் பதிவுகளும் இல்லை. எனது தாயைக் கண்டறிய திருப்பதி போலீஸாா் ஆா்வம் காட்டவில்லை. எனவேதான், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன் என்றாா்.