ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!
தாராபுரம் அருகே கேபிள் ஒயா் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
தாராபுரத்தை அடுத்த மனக்கடவு கிராமத்தில் கேபிள் ஒயா் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சகோதரா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மனக்கடவு பகுதியில் வினிதா என்பவருக்குச் சொந்தமாக உள்ள கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாா் ஒயரை 100 மீட்டா் அளவுக்கு வெட்டி மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இது குறித்து அளித்த புகாரின்பேரில், அலங்கியம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மனக்கடவு காட்டம்மன் கோவில் புதூா் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் வினிதாவுக்கு சொந்தமான தோட்டத்தில் ரூ.6 ஆயிரத்து 500 மதிப்புள்ள 100 மீட்டா் ஒயரை அவா்கள் திருடியது தெரியவந்தது. சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான சக்திவேல் (30), சின்ராசு (26), ராசு (24) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அலங்கியம் போலீஸாா் மூவரையும் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து கேபிள் ஒயா்களை பறிமுதல் செய்தனா்.