செய்திகள் :

தாராவியின் கதை: சமூகங்களாக மோதிக்கொண்ட தமிழர்கள்; ஒதுங்கி நின்ற வரதாபாய் | பகுதி 3

post image
மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..!

முந்தைய பாகத்தை படிக்க...

கடந்த பாகத்தில் மும்பையில் தென்னிந்தியர்களுக்கு எதிரான கலவரம், குறிப்பாக தமிழர்களை டார்கெட் செய்த சிவசேனாவினர் குறித்து பார்த்தோம்... இனி...

மும்பையில் தென்னிந்தியர்களுக்கு எதிரான கலவரம் முடிந்த பிறகு, சிவசேனா ஒருபுறம் வளர்ச்சியடைய தொடங்கியது. தாராவியில் தொழில் போட்டி காரணமாக தமிழர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. தாராவியில் தோல் பதனிடும் தொழில் பிரதானமாக இருந்தாலும் சிலர் அது பிடிக்காமல் சாராயம் காய்ச்சுவது, சேவு, மிச்சர் மற்றும் இனிப்பு பண்டங்கள் தயாரிப்பது போன்ற தொழிலில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த திரளான தமிழர்கள் வந்து முறுக்கு, சேவு, இனிப்பு பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து செய்து வந்தனர்.

தாராவியில் தமிழர்கள் குடியேறியபோது ஆரம்பத்தில் தோல்வாடிகளில் குடியேறினாலும், நாளடைவில் சமூக ரீதியில் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். தாராவியில் பிரதானமாக தமிழகத்தை சேர்ந்த மூன்று சாதியினர் தான் 1970-களில் வசித்தனர். அதில் ஒரு பிரிவினர் மாகிம் ரயில் நிலையம் அருகில் தங்களுக்கான இருப்பிடத்தை அமைத்துக்கொண்டனர். தாராவி 90 அடி அமைக்கப்படுவதற்கு முன்பு அதன் இரு பக்கத்திலும் அதிகப்படியான குடியிருப்புகள் இருந்தன. தற்போது டிரான்சிட் கேம்ப் எனப்படும் பகுதி செடிகளும், புதர்களும் முளைத்து சேரும் சகதியுமாக இருந்தது. அதனை சாராயம் காய்ச்ச மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

எஸ்.கே.ராமசாமி

தாராவியில் 90 அடி சாலை 1970-75களில் வடிவம் பெற்றபோது சாலையோரம் இருபுறமும் வசித்தவர்களுக்கு டிரான்சிட் கேம்ப் பகுதியில் அரசு நிலம் கொடுத்து வீடு கட்டிக்கொள்ளும்படி தெரிவித்தது. அதனால்தான் அப்பகுதி டிரான்சிட் கேம்ப் என்று அழைக்கப்பட்டது. இந்த சாலையை யாரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் இருந்தது. 90 அடி சாலையையொட்டி இரு சமூகத்தினர் சமமாக இருந்தனர். இதில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது மற்றும் சாராயம் குடித்துவிட்டு ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்குவது போன்ற செயல்கள் அடிக்கடி நடந்தது. ஒரு கட்டத்தில் இது பெரிய சமூக மோதலாக மாறியது.

1976-ம் ஆண்டு இரு சமூகத்தினர் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர். கையில் அரிவாளுடன் தாராவியில் சுற்ற ஆரம்பித்தனர். ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்க்க ஆரம்பித்தனர். இந்த கலவரத்தில் ஒரு தரப்பில் காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக இருந்த எஸ்.கே.ராமசாமி தனது மக்களுக்கு அரணாக இருந்தார். எஸ்.கே.ராமசாமி மும்பையில் அந்நேரம் தாதாவாக விளங்கிய வரதாபாயிக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். ஆனால் சமூக ரீதியிலான கலவரம் என்று ஒன்று வந்த போது வரதாபாய் எந்த பிரிவுக்கும் ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கிக்கொண்டார். அதோடு வரதாபாய் தாராவி விவகாரத்தில் எந்த விதத்திலும் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டது கிடையாது.

பொன்னையா

தாராவியில் தமிழர்கள் மோதிக்கொண்டபோது ஒரு பிரிவினரது வீட்டை மற்ற பிரிவினர் சூறையாடினர். இக்கலவரத்தை போலீஸாரால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இக்கலவரத்தில் நேடியாக பாதிக்கப்பட்ட கே.வி.அசோக்குமாரிடம் இது குறித்து பேசுகையில், ''சாராயப் பிரச்னையால்தான் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். என்னைகூட போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து போலீஸ் வேனில் அழைத்துச்சென்றனர். அந்நேரம் போலீஸ் வேனில் இருந்து இறங்கிய போது என்னை அரிவாளால் வெட்டிவிட்டனர். அதில் ஏற்பட்ட காயத்தின் தழும்புகள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

ஞானம்

அவர்கள் எனது பெயரில் உள்ள வேறு ஒருவரை வெட்டுவதற்கு பதில் என்னை வெட்டிவிட்டனர்''என்றார்.

எஸ்.கே.ராமசாமி, துரை சேட் போன்ற முக்கிய பிரமுகர்கள் தங்களது சமுதாய மக்களை பாதுகாக்க அரணாக நின்ற போது மற்றொரு சமுதாயத்திற்கு வில்பர்ட் மற்றும் அவரது சகோதரர் ஞானம், பொன்னையா போன்றோர் தங்களது சமூகத்துக்கு துணையாக நின்றனர்.

துரை சேட்

இவர்களில் சிலர் கலவரத்திற்காக தமிழகத்தில் இருந்து கூட ஆட்களை கொண்டு வந்ததாக கலவரத்தை நேரில் பார்த்த தட்சனாமூர்த்தி என்பவர் தெரிவித்தார். கலவரக்காரர்கள் அதிகமாக இரவு நேரங்களில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால் போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. கலவரத்தை கட்டுப்படுத்த தாராவி 90 அடி சாலையில் ராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.

6 மாதத்திற்கும் மேல் நீடித்த கலவரம் படிப்படியாக அடங்கியபோது ஒரு பிரிவினர் தாராவி கிராஸ் ரோஸ் பகுதியை தங்களது பகுதியாக்கிக்கொண்டனர். மற்றொரு பிரிவினர் தாராவி 90 அடி சாலை, டிரான்சிட் கேம்ப் போன்றவற்றை தங்களது வசமாக்கிக்கொண்டனர். 1976-களில் ஏற்பட்ட அதே பிரிவினைதான் இன்றைக்கும் தாராவியில் இருக்கிறது. ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் மற்றொரு பிரிவினர் செல்வதை தவிர்த்து விடுகின்றனர். தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கணேசர் ஆலயத்திற்கு கூட ஒரு பிரிவினர் செல்வதில்லை. அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாகத்தான் தாராவியில் தெருவுக்கு தெரு சாதி ரீதியிலான சங்கங்கள் உருவாக காரணமாக அமைந்தது. மும்பை முழுக்க 200க்கும் மேற்பட்ட சாதிச்சங்களை தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.

வில்பர்ட்

தாராவிக்கு பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் தங்களுக்கென சொந்தமாக பள்ளி ஒன்றை 1961-ல் ஆரம்பித்தனர். காந்தியார் என்பவர், இப்போது காமராஜர் பள்ளி இருக்கும் இடத்தில் இருந்த தெலுங்குக்காரர்கள் வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் பள்ளி ஒன்றை தொடங்கினார். ஆனால் நாளடைவில் அந்த பள்ளியை தெட்ஷணமாற நாடார் சங்கம் வசம் சென்றது. அந்த பள்ளியை மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் வந்து திறந்து வைத்துவிட்டுச்சென்றார்.

அந்த நேரத்தில் தமிழர்கள் தமிழ் வழியில் படிக்க அந்த பள்ளி மட்டும்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு மும்பை மாநகராட்சி நிர்வாகம் மும்பை முழுவதும் தமிழ் வழிப்பள்ளிகளை தொடங்கி நடத்த ஆரம்பித்தது. தாராவியில் இப்போது தமிழர்கள் மேலும் சில பள்ளிகளை நடத்தி வந்தாலும் காமராஜர் பள்ளி இதில் முதலிடத்தில் இருக்கிறது.!

தொடரும்..!

பழங்கால ஆயுதம் முதல் நவீனரக துப்பாக்கி வரை... உதகையில் காவல்துறை நடத்திய ஆயுத கண்காட்சி!

காவல்துறையில் ஆரம்பகட்ட காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன ரக உபகரணங்கள் வரை மக்களுக்கு எடுத்துரைக்க விரும்பிய நீலகிரி மாவட்ட காவல்துறை, அதற்கான சிறப்பு... மேலும் பார்க்க