தாலிச் சங்கிலி பறிக்க முயன்றவா் கைது
விராலிமலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விராலிமலை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மனைவி லோகபிரியா (25). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே நடந்து சென்ற போது, பின்னால் நடந்து வந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த பூபதி மகன் சுரேந்தா் (33) என்பவா் லோகபிரியா கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளாா். இதை சுதாரித்து கொண்ட அவா் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் தப்பி ஓடிய சுரேந்தரை விரட்டிப் பிடித்து விராலிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா் மீது வழக்கு பதிந்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுகை கிளைச் சிறையில் அடைத்தனா்.