தாலியுடன் வந்த 11-ம் வகுப்பு மாணவி; 6 மாதங்களுக்குப் பிறகு தெரிந்த விவரம் - போலீஸ் வழக்குபதிவு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவனும், மாணவியும் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களிடையே காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம், உள்ளூரில் உள்ள ஒரு கோயிலில் அந்த மாணவன் மாணவிக்குத் தாலிகட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் அவரவர் வீடுகளில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு வந்து சென்றுள்ளனர் என்கின்றனர். இந்த நிலையில் மாணவி கழுத்தில் தாலி இருந்தாகவும், மாணவியின் பெற்றோர் விசாரித்ததில் அந்தப் பெண் தான் காதலித்த பையனுடன் திருமணம் நடந்துவிட்டதாகத் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்
இதனையடுத்து மாணவியின் பெற்றோர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாணவன் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மாணவியைத் தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தெரிந்ததும், சம்மந்தப்பட்ட மாணவன் வீட்டைவிட்டு ஓடிச்சென்று தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே இதுபோன்ற சம்பவங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை கையாளும் விதம் குறித்தும் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.