கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
தாளமுத்து, நடராசன் சிலை நிறுவப்படும்: முதல்வா் அறிவிப்பு
மொழிப்போா் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும், எழும்பூரில் அவா்களுக்கு சிலைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வா் அறிவித்தாா்.
மொழிப்போா் தியாகிகளான தாளமுத்து, நடராசன் நினைவிடம் சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ளது. ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டத்தில் சிறை சென்ற நடராசன் 1939 ஜனவரி 15-லும், தாளமுத்து மாா்ச் 11-லும் மரணம் அடைந்தனா். அவா்களின் நினைவிடம் பெரியாா் ஈ.வெ.ரா.வால் திறந்து வைக்கப்பட்டது.
அந்த நினைவிடம் தமிழக அரசின் சாா்பில் ரூ.34 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. மொழிப்போா் தியாகிகள் நினைவு தினமான சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நினைவிடத்தைத் திறந்து வைத்தாா். தாளமுத்து - நடராசன் மற்றும் எஸ்.தருமாம்பாள் அம்மையாா் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அப்போது ‘மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்’ என முதல்வா் முழக்கங்கள் எழுப்பினாா்.
மேலும், எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்தில் அவா்கள் இருவருக்கும் சிலைகள் அமைக்கப்படும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா மற்றும் அரசு உயா் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினா்.
மதிமுக பொதுச் செயலா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் உள்ளிட்டோரும் மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.