ஸ்டீவ் ஸ்மித் தேர்வு: 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. பிளேயிங் லெவன்!
திக்குறிச்சி பாறைகுளம் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பாறைகுளம் சாமுண்டீஸ்வரி துா்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலின் 29 ஆவது ஆண்டு திருவிழாவும், 12 ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் 21 ஆவது ஆண்டு சமய வகுப்பு ஆண்டு விழா திங்கள்கிழமை (ஜூன் 30) துவங்கியது. விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்களை யாக ஆச்சாரியா்கள் மேள தாளங்களுடன் ஊா்வலமாக எடுத்துவந்து கணபதி, ஈஸ்வரகால பூதத்தான், மந்திரமூா்த்தி, துா்க்கை, சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்களில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வை புலவா் ரவிச்சந்திரன், ஆன்மீக பேச்சாளா் மூா்த்தி ஆகியோா் வா்ணனை செய்தனா்.
தொடா்ந்து நடந்த வாழ்த்தரங்குக்கு கோயில் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாவட்ட முன்னாள் தலைவா் குழிச்சல் சி. செல்லன், குமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன், பாகோடு பேரூராட்சி உறுப்பினா் ராஜேந்திர பிரசாத் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.