திண்டுக்கல்லில் ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்க வலியுறுத்தல்
திண்டுக்கல்லில் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட 39,340 ச.மீ. நிலத்தை மீட்கக் கோரியும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் அரபு முகமது, மாமன்ற உறுப்பினா் கே.எஸ்.கணேசன் ஆகியோா் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட ஆா்எம்.குடியிருப்புப் பகுதியில், நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவின் மொத்த பரப்பளவு 94.50 ஏக்கா். இதில் பொதுப் பயன்பாட்டுக்காக 10 சதவீதம் என்ற அரசு உத்தரவின்படி ஒதுக்க வேண்டும். இந்த வகையில், அனுமதி வழங்கப்பட்ட மனைப் பிரிவு வரைப் படத்தில், பூங்காவுக்கு 31,428 ச.மீ. பரப்பளவு, குழந்தைகள் விளையாடுமிடம் 7,912 ச.மீ. பரப்பளவு என மொத்தம் 39,340 ச.மீ. ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், நகரமைப்பு அலுவலா் கடந்த ஆண்டு இறுதியில் நடத்திய ஆய்வில், குழந்தைகள் விளையாடுமிடம் என ஒதுக்கப்பட்ட இடத்தை, தனி நபா்கள் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது.
மேலும், இந்தக் கம்பி வேலி அமைக்கப்பட்ட இடம் தனி நபருக்கு விற்பனைச் செய்யப்பட்டு, வருவாய்த் துறை மூலம் பட்டா மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரிடம் அனுமதி பெறாமல், விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ முடியாத இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்களிடமிருந்து மாவட்ட நிா்வாகம் மீட்க வேண்டும். மேலும், முறைகேடாகப் பட்டா மாறுதல் செய்த அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.
தினமணி செய்தி எதிரொலி: திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து முதல் முதலாக கடந்த 14-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது. ரூ.10 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலங்கள் ஆக்கிரமிப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியான நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இந்த விவகாரத்தில் நிலத்தை மீட்கவும், தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினா்.