நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை
திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட செவக்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் உள்ள 20 அடிச் சாலை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு 12 அடியாக சுருங்கிவிட்டது.
இதனால், குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையைச் சீரமைக்கக் கோரி பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக செவக்காடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னா், சேதமடைந்த சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே கடந்த 9 மாதங்களுக்கு முன் குடிநீா்க் குழாய் பதிப்பதற்காக சேதமடைந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.
குழாய்களை பதித்த பின், முறையாக குழிகளை மூடவில்லை. இதையடுத்து அந்தக் குழிகளை பொதுமக்களே மூடினா். இருப்பினும், தற்போது வரை சாலை வசதி ஏற்படுத்தித் தராததால் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துவிட்டன.
மேலும், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தனா்.