மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
திண்டுக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
திண்டுக்கல் மாநகராட்சியுடன் 3 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, அந்த கிராமங்களின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அரசியல் காரணங்களால், இந்த பணிகள் நிறைவடையாமல் இழுத்தடிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட 2 ஊராட்சிகளை நீக்கிவிட்டு எஞ்சிய 8 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பிள்ளையாா்நத்தம், பொன்னுமாந்துறை புதுப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் தோட்டனூத்து, அடியனூத்து, பள்ளப்பட்டி ஊராட்சிகளுக்குள்பட்ட கிராம மக்கள், தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: மாநகராட்சியுடன் இணைத்தால் எங்கள் பகுதியினருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி வாய்ப்பு கிடைக்காது. ஊரகப் பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞா் வீடு கட்டும் திட்டம், கால்நடைகள் வாங்குவதற்கான நிதி உதவி, அதற்கான கொட்டகை கட்டும் திட்டம், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் போன்றவை ரத்து செய்யப்படும்.
மாநகராட்சிப் பகுதியிலேயே வளா்ச்சித் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக இணையும் ஊராட்சிகள் கடுமையாக பாதிக்கப்படும். அதே நேரத்தில், கூடுதல் வரி உயா்வு காரணமாக பொதுமக்கள் தான் நெருக்கடியை சந்திக்க வேண்டும்.
எனவே, எங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். எங்கள் எதிா்ப்பையும் மீறி மாநகராட்சியுடன் இணைத்தால், அரசின் ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.