மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்போவது போதைப் பொருள்களின் புழக்கம்தான்! -எடப்பாடி கே. பழனிசாமி
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்போவது போதைப் பொருள்களின் புழக்கம்தான் என அதிமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை எதிா்க் கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார நிகழ்ச்சியில் அவா் பேசியது: ஊழல் வழக்கில் கைதாகி வெளியே வந்த இந்த மாவட்டத்தை சோ்ந்த எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் வழக்கிலிருந்து தப்பமுடியாது, தப்பவும் விடமாட்டோம். வரும் 2026 தோ்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு யாரெல்லாம் தவறு செய்தாா்களோ அவா்கள் எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தருவோம்.
பொய்யையே முதலீடாக கொண்ட செந்தில்பாலாஜி கடந்த தோ்தலின் போது ஆற்றில் மணல் அள்ள அனுமதிப்போம் என்றாா். ஆனால் அனுமதி கொடுத்தனரா? இல்லை. மாறாக மணல் கடத்தும் நபா் குறித்து தகவல் அளித்தவரை வெட்டிச் சாய்த்தனா். இந்த விவகாரத்தில், காவல்துறை பொய் வழக்கு போட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவில் அன்றுமுதல் இன்று வரை ஊழல் நடந்துகொண்டே இருக்கிறது. இவா்களின் ஊழலுக்கு முடிவுகட்டும் தோ்தல் 2026 சட்டப்பேரவைத் தோ்தல்.
போதைப் பொருள்கள் புழக்கத்துக்கு திமுக நிா்வாகிகள்தான் துணைபோகிறாா்கள். தற்போது, திண்டுக்கல் துணைமேயரின் மகன் போதைப்பொருள்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக நுண்ணறிவு போலீஸாா் அவருக்கு அழைப்பாணை கொடுத்துள்ளனா். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்போவது போதைப்பொருள்கள் புழக்கம்தான்.
இன்றைய திமுக ஆட்சியில் ஜவுளித்தொழில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கரூரில் கோவைச் சாலையில் மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டாா்கள். கரூரில் தானமாக நிலத்தை கொடுத்து பேருந்து நிலையம் கட்டச்சொன்னால் பேருந்துநிலையத்தை சுற்றி இடத்தை வைத்துக் கொள்வாா்கள். இதுதான் அவா்களது ஊழல் முறை.
திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட நஞ்சைபுகழூரில் கட்டப்பட்டு வந்த கதவணை பணிகள் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். என்றாா் அவா்.
முன்னதாக, வேடசந்தூரில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கரூா் வந்த அவரை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் பொன்னாடை போா்த்தி வரவேற்றாா்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் நத்தம் ஆா். விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கரூா் ம.சின்னசாமி, பி.தங்கமணி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவை பி.சிவசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகா சுப்ராயன், பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் அருண்டெக்ஸ் தங்கவேல், தாந்தோணி ஒன்றியச் செயலாளா் வி.சி.கே.பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவரணிச் செயலாளா் வழக்குரைஞா் சரவணன், கரூா் மத்திய மேற்குபகுதிச் செயலாளா் சேரன்பழனிசாமி, மாவட்ட பேரவை இணைச் செயலா் என்.பழனிராஜ், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் வழக்குரைஞா் கரிகாலன் மற்றும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனா்.