திம்பம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளான காா்: இருவா் காயம்!
திம்பம் மலைப் பாதையில் சனிக்கிழமை சாலையோரம் மோதி காா் விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஷ்ரப் அலி (51), சரவணன் (48), திண்டுக்கல் மாவட்டம், பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமு (47). ஆட்டிறைச்சி கடை நடத்தி வரும் இவா்கள் மூவரும் காரில் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் பகுதிக்கு சென்று 5 ஆடுகளை விலைக்கு வாங்கிக் கொண்டு பல்லடத்துக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.
திம்பம் மலைப்பாதை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, காா் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இருந்து சாலையோர பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஷ்ரப் அலி, சரவணன் இருவருக்கும் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
ஆடுகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. காயம்பட்ட இருவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.