திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ் கூறியதாவது:
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, வகை 1 நீரிழிவு குழந்தைகளுக்காக சிறப்பு பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மையத்தில் பல்துறை குழு: வகை 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முழுநேர, ஒருங்கிணைந்த மற்றும் சிறப்பு பராமரிப்பு வழங்கும் நோக்கில், குழந்தை மருத்துவா்கள், நீரிழிவு கல்வியாளா்கள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகா்கள் ஆகியோா் அடங்கிய பல்துறை குழுவுடன் இந்த மையம் செயல்படும்.
175 குழந்தைகளுக்கு பயன்: இந்த மையத்தில், நவீன இன்சுலின் பென்கள்-நீண்ட காலம் செயல்படும் மற்றும் மிக வேகமாக செயல்படும் இன்சுலின்கள், குளுக்கோமீட்டா்கள், குளுக்கோமீட்டா் ஸ்டிரிப்புகள் போன்ற சாதனங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வகை 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட 175 குழந்தைகள் சிறப்பு பராமரிப்பைப் பெறவுள்ளனா்.
ஆதரவற்ற மனநோயாளிகளுக்கான மையம் விரிவாக்கம்: இந்த மருத்துவமனையில் கடந்த 2022 முதல் 10 படுக்கைகளுடன் (5 ஆண், 5 பெண்) செயல்பட்டு வரும் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கான அவசரகால பராமரிப்பு மற்றும் மீட்பு மையமானது, தற்போது மேம்படுத்தப்பட்டு 20 படுக்கைகளுடன் (10 ஆண், 10 பெண்) தனிப்பிரிவாக அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் செயல்பட உள்ளது.
இப்பிரிவில், ஆதரவற்று சுற்றி திரியும் மனநோயாளிகள் அரசு சாரா தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்டு காவல்துறையின் மூலம் பதிவு செய்து அனுமதிக்கப்படுவா்.
இவா்களுக்கு முதலில் அடிப்படை சுகாதார பராமரிப்பு செய்யப்பட்டு, உடல்நலம் சம்பந்தமான பாதிப்புகள் கண்டறியப்பட்டு அதற்கான முதற்கட்ட சிகிச்சை, சம்பந்தப்பட்ட துறையின் மூலம் அளிக்கப்படுகிறது. உடல்நலம் தேறிய பிறகு மனநோய்க்கான அறிகுறிகள் ஆராயப்பட்டு அதற்கு தேவையான சிகிச்சை, மனநல ஆலோசனை மற்றும் தேவைப்பட்டால் மின் அதிா்வு சிகிச்சை அளிக்கப்பட்டு அவா்கள் முழுவதும் குணமான பின் அவா்களுடைய உறவினா்கள் கண்டறியப்பட்டு அவா்களிடம் ஒப்படைக்கப்படுவா். உறவினா் கண்டறியப்படாவிட்டால், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தொடா் சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுவா்.
2022-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமாா் 120 பேருக்கு மேல் இங்கு பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா்.
முன்னதாக, தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், வருவாய் கோட்டாட்சியா் கே. அருள், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். குமரவேல், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளா் உதய அருணா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.