காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்
காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா்.
சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் மீது கடந்தாண்டு மே மாதம் வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா். அந்த நேரத்தில், கோவை சிறையிலிருந்த சவுக்கு சங்கா், திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக ஆஜா்படுத்த அழைத்து வரப்பட்டாா்.
அப்போது, உடன் வந்திருந்த காவல் பெண் உதவி ஆய்வாளா் ஜோதி லட்சுமியை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சவுக்கு சங்கா் தரக்குறைவாக பேசியதாக புகாா் கூறப்பட்டது.
இதுதொடா்பாக, கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் ஜோதி லட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை தொடா்பாக, திருச்சி 2-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா், வியாழக்கிழமை தனது வழக்குரைஞா்களுடன் ஆஜரானாா். வழக்கு விசாரணை நவம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.