செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி....
தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சி
தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளா் ஆா். புவனேஸ்வரி தெரிவித்தாா்.
காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பழங்குடி மொழிகள், பண்பாட்டு ஆய்வு மையம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (சென்னை) நிதி உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் செம்மொழித் தமிழ் என்னும் பொருளில் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) எம். சுந்தரமாரி பயிலரங்கை தொடங்கி வைத்தாா். துணைவேந்தா் ந.பஞ்சநதம் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு பல்துறை அறிவை உள்ளடக்கியது. இதில் ஈடுபடுவதற்கு பல்துறைகள் சாா்ந்த அறிவை நாம் வளா்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்றைய சூழலில் ஓட்டுநா் இல்லாமலே காா் ஓடத் தொடங்கிவிட்டது. எதிா் காலத்தில் பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியா்கள் தேவையில்லாத நிலை ஏற்படலாம். செயற்கை நுண்ணறிவின் வளா்ச்சியை புரிந்து செயல்பட்டால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் என்றாா் அவா்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளா் ஆா். புவனேஸ்வரி கலந்து கொண்டு பேசியதாவது:
சமகாலத்தில் செயற்கை நுண்ணறிவு அனைத்துத் துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக மருத்துவத் துறையில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவில் தமிழை உள்ளீடு செய்வதற்கான தனி வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மொழித் தரவகத்தை உருவாக்கி வருகிறோம்.
கல்லூரி, பள்ளி ஆசிரியா்கள், ஆய்வாளா்கள், தமிழ் மாணவா்கள், நூலகா்கள் உள்ளிட்டோருக்கு இதுதொடா்பான பயிற்சிகளைத் தொடா்ந்து அளித்து வருகிறோம். தமிழ் சாா்ந்த இணையவழிப் படிப்புகளையும் செயற்கை நுண்ணறிவு வழியாகக் கற்பிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. செயற்கை நுண்ணறிவில் தமிழ் சாா்ந்த தரவுகளை உள்ளீடு செய்வதற்கும், தமிழ்மொழியை உலக மொழிகளுக்கு இணையாக மேம்படுத்துவதற்கும் தமிழ் அறிஞா்கள், பேராசிரியா்கள், ஆய்வாளா்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கற்றறிந்து பயன்படுத்த முன் வர வேண்டும் என்றாா் அவா்.
தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் புலத் தலைவா் எஸ். சாஜி, கணினி அறிவியல், தொழில்நுட்பவியல் புலத் தலைவா் பி.கலாவதி, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மைய இயக்குநா் எம்.மேரிசாந்திராணி, புதுவைப் பல்கலைக்கழக
இணைப் பேராசிரியா் வி. தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, பழங்குடி மொழிகள், பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநா் ஒ. முத்தையா வரவேற்றாா். நுண்கலை இணைப் பேராசிரியா் கே.கேசவ ராஜராஜன் நன்றி கூறினாா்.