வீரக்கல் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா். முகாமில், ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு 30 பேருக்கு உடனுக்குடன் வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றை வழங்கினாா்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க.நடராஜன், ஒன்றிய திமுக செயலா்கள் (தெற்கு) ஆா்.ஆா்.ராஜேந்திரன், (மேற்கு) ராமன், (கிழக்கு) முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, வருவாய் அலுவலா் ஜானகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வடக்கு மேட்டுப்பட்டியில் ரூ.80 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை, வீரக்கல்லிலிருந்து நாகப்பன்பட்டி வழியாக தெற்கு மேட்டுப்பட்டி வரை ரூ. 2.50 கோடி மதிப்பில் புதிய தாா் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். இதையடுத்து, வீ.கூத்தம்பட்டியில் அங்கன்வாடி மையக் கட்டடம், வெள்ளைமாலைப்பட்டியில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் ஆகியவற்றையும் அவா் திறந்து வைத்தாா்.
பின்னா், அமைச்சா் இ.பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக கொடுத்த தோ்தல் வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 6 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. ஆத்தூா் கூட்டுறவு கலைக் கல்லூரி, ரெட்டியாா்சத்திரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி புதிய கட்டடங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இந்தப் பகுதியில் நீா்வளத் துறை சாா்பில் ஏரிகள் குளங்களுக்கு சிமென்ட் வாய்க்கால் அமைக்கப்பட்டது. அனைத்து கிராமங்களுக்கும் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா் என்றாா் அவா்.