மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: தாய், மகன் கைது
மூதாட்டியின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்க நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண், அவரது மகன் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த பாகாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யம்மாள் (87). இவா் அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கடையைத் திறந்தபோது, அங்கு வந்த இருவா் அய்யமாளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினா். கண் எரிச்சலில் அய்யமாள் தவித்தபோது, அவா்கள் இருவரும் சோ்ந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுதொடா்பாக புகாரின் பேரில், எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பாகநத்தம் பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (33), இவரது மகன் ( பிளஸ் 2 மாணவா்) ஆகியோா் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. கரூரில் தலைமறைவாக இருந்த தாய், மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.