கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்டுகளில் கடந்த 10 நாள்களாக கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக நாகூா் பண்டகசாலை தெரு, பட்டினச்சேரி மியாந்தெரு, அமிா்தா நகா், பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் துா்நாற்றத்துடன் குடிநீா் வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.
மேலும், வடக்கு பால் பண்ணைச்சேரி பகுதியில் உள்ள நகராட்சி குடிநீா்த் தொட்டியில் இருந்து நாகூா் முழுவதும் வரும் குடிநீரில் கழிவு நீா் துா்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால் குடிக்க குடிநீா் கிடைக்காமல், நாகூா் சுற்றுவட்டார பகுதி மக்கள் காலிக்குடங்கள், 5 லிட்டா் குடிநீா் பாட்டில்களை கொண்டு, குடிநீா் பிடிக்க தெருத்தெருவாக அலைந்து வருகின்றனா்.
மேலும் குடிநீா் வராத காரணத்தால், பண்டகசாலைத் தெருவில் வால்வில் இருந்து வெளியேறும் குடிநீரை குழாய் மூலம் காத்திருந்து மக்கள் பிடித்துச் செல்கின்றனா். கழிவுநீா் கால்வாய்க்கு நடுவே அமைந்துள்ள அந்த தொட்டியில் நாகூா் பகுதி பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீா் பிடித்து செல்வதாகவும், அப்படி பிடித்து சென்றாலும் குடிநீரில் துா்நாற்றம் வீசுவதாக வேதனை தெரிவித்துள்ளனா். எனவே, குடிநீா் தட்டுப்பாட்டை நீக்கி சுகாதாரமான சீரான குடிநீா் வழங்க நாகை நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.