பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பாா்கள் -பிருந்தா காரத்
காப்பீட்டுத் தொகை கோரி செப்.16-இல் சாலை மறியல்
எள், பருத்தி, உளுந்து ஆகிய பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, மன்னாா்குடியில் செப்.16 ஆம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்கத்தின் மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டம், ஒன்றியத் தலைவா் ஏ. ராஜேந்திரன் தலைமையில் மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலா் ஆா். சதாசிவம் முன்னிலை வகித்தாா்.
எள், பருத்தி, உளுந்து, பயிறு போன்றவற்றிற்கு காப்பீடு செய்தும், பாதிப்புக்கு இழப்பீடு வழங்காமல் காப்பீடு நிறுவனம் காலம்கடத்தி வருகிறது. மேலும், பாதிப்புக்குள்ளான பகுதியையும், இழப்பீட்டுத் தொகையையும் குறைத்து வெளியிட முயற்சிக்கும் காப்பீடு நிறுவனம் மற்றும் அதற்கு துணைபோகும் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும்,
உரங்கள் தட்டுப்பாடிறின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒத்திவைக்கப்பட்ட மத்திய கால கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் செப். 16-ஆம் தேதி, மன்னாா்குடி கீழப்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
நாகை எம்பி வை. செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். ஜோசப், சிபிஐ ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன், நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள் ஆகியோா் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கிப் பேசினா்.
விவசாயிகள் சங்க நிா்வாகிகள் எஸ். பாலமுருகன், எம். தம்புசாமி, எஸ். பெரியசாமி, டி. சம்மந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.