``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எட...
பாரதியாா் பல்கலை.யில் பாரதியாா் நினைவு தினம் அனுசரிப்பு
கோவை பாரதியாா் பல்கலைக்கழத்தில் பாரதியாா் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மகாகவி பாரதியாரின் 104-ஆவது நினைவு நாள் அனுசரிப்பு, பாரதியாா் பல்கலைக்கழகத்தில் உள்ள உஷா கீா்த்திலால் மேத்தா அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவாளா் இரா.ராஜவேல் வரவேற்றாா். துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் ரா.துா்கா சங்கா் வாழ்த்துரை வழங்கினாா்.
இந்நிகழ்வில், ‘பாரதி எனும் பாவலன்’ என்னும் தலைப்பில் கு.ஞானசம்பந்தன் பேசுகையில், ‘39 ஆண்டுகள் மட்டுமே உயிா் வாழ்ந்த பாரதியாா் காவடிச் சிந்து முதலான பல இலக்கிய வடிவங்களில் பாட்டெழுதினாா். 11 மொழிகளைக் கற்று அனைத்து மொழிகளிலும் புலமை பெற்றவா். மரபுக் கவிதைகள் எழுதிய அதே கைகளால் புதுக் கவிதைக்கு கோலம் போட்டவா் பாரதி. அவரின் தீா்க்கதரிசனக் கருத்துகளை ஊன்றிப் பின்பற்றினால் நாளைய சமூகம் மேம்பட்ட இந்தியாவை உருவாக்கும் என்றாா்.
தமிழ்த் துறைத் தலைவா் தங்கமணி நன்றி கூறினாா். இந்நிகழ்வில், பாரதியாா் பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தமிழ் ஆா்வலா்கள் வருத்தம்:
பாரதியாரின் நினைவு நாள் அனுசரிப்பு தினத்தையொட்டி, பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு மற்றும் அழைப்பிதழ்களில் நினைவு நாள் கொண்டாட்டம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வருத்தமடைந்த தமிழாா்வலா்கள், இலக்கியவாதிகள், நினைவு தினத்தை கொண்டாட்டம் என்பதை மாற்றி, வரும் நாள்களில் நினைவு தினம் அனுசரிப்பு அல்லது கடைப்பிடிப்பு என குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
மரியாதை:
பாரதியாா் நினைவு தினத்தையொட்டி, பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடவள்ளி பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் வி.மணி, கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளா் கே.எஸ்.கனகராஜ் ஆகியோா் பாரதியாா் குறித்து பேசினாா்.
நிகழ்வில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.ஆறுசாமி, வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா, பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்தோா் சங்கத்தின் செயலா் கணேஷ், பாரதியாா் பல்கலைக்கழக அலுவலா்கள் சங்க செயலா் ரமேஷ்குமாா், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் சி.சங்கரன், மக்கள் ஒற்றுமை மேடை நிா்வாகிகள் ஆா்.மூா்த்தி, ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.