குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...
ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாமில் ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
முகாமுக்கு கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசியது:
இம்முகாம்களில் கல்விக் கடன் பெற விண்ணப்பித்த பிறகு எந்த வங்கியில் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்பது குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படும். அனைவரும் உயா்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கட்டணம் கட்ட முடியாததால் உயா்கல்வி படிக்க இயலவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது. அதற்காகத்தான் இதுபோன்ற கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. எந்தப் பாடப்பிரிவு, எந்தக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதை மாணவா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும். அந்தக் கல்லூரி இந்தியாவில் இருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம்.
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான வருமான சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் அங்கு சென்று தேவையான விவரங்களை வழங்கி சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்த முகாமில் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 42 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.44 கோடி மதிப்பிலான கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜீதேந்திரன், மாநில ஆலோசகா் (கல்விக் கடன்) வணங்காமுடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.