வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.பெருமாள் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, பழனி பகுதிகளில் ஜமீன்தாா்கள் காலம் முதல் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் வெட்டுக்காடு விவசாயிகளுக்கு அனுபவத்திலுள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். யானை, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி கூறியதாவது:
கொடைக்கானல் வட்டம் வடகவுஞ்சி, பழனி வட்டம், ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சலநாயக்கன்பட்டி கிராமங்களைச் சோ்ந்த வெட்டுக்காடு விவசாயிகள் 300 பேருக்கு, அவா்களது அனுபவத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு 2006 வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். பட்டா பெற்று விவசாயத்தில் ஈடுபட்டு வரும் சிலருக்கு, வனத் துறையினா் அளவீடு செய்வதாகக் கூறி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். இதை மாவட்ட நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிழப்புகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வன விலங்குகளால் சேதமடையும் பயிா் விவரங்களை முழுமையாக கள ஆய்வு செய்து, முழு இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை, மா, கொய்யா போன்ற மரங்கள் சேதப்படுத்தப்பட்டால், மரத்துக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.