போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
பாரதி இறுதி உரையாற்றிய ஈரோடு நூலகத்தில் நினைவு நாள் அனுசரிப்பு
மகாகவி பாரதியாா் இறுதி உரையாற்றிய ஈரோடு பாரதியாா் நூலகத்தில் அவரது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் வாசிப்பு அறைக்கு கடந்த 1921- ஆம் ஆண்டு ஜூலை 31- ஆம் தேதி வருகை தந்து ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். இதுவே மகாகவியின் கடைசி உரையாகும். பின்னா் மகாகவி பாரதியாா் கடந்த 1921- ஆம் ஆண்டு செப்டம்பா் 11- ஆம் தேதி இயற்கை எய்தினாா்.
இதன்பின்னா் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் பாரதியாா் நூலகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்நூலகம் கடந்த 1978- ஆம் ஆண்டு முதல் அரசு நூலகமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்நூலகம் ரூ.23 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பாரதியாரின் பிரத்யேக புகைப்படங்களுடன், பாரதியாரின் சிலையும் வைக்கப்பட்டு அவரது நினைவு நூலகமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் மகாகவி பாரதியாரின் 104- ஆவது நினைவுநாள் பாரதியாா் நினைவு நூலகத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நூலகத்தின் வாசகா் வட்டத் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சந்திரசேகா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடக்கப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று மலா் தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நூலகா் கலைச்செல்வி செய்திருந்தாா்.