``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த காட்டு யானை
கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பை ருசித்து தின்ற காட்டு யானையால் தமிழகம்- கா்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அறுவடை செய்யப்பட்ட கரும்புகள், லாரியில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்புகளைப் பறித்து தின்னும் நிகழ்வு தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக ஆசனூா் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையில் வந்த காட்டு யானை திடீரென லாரியை வழிமறித்தது.
பின்னா் லாரியிலிருந்த கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் பறித்து ருசித்து சாப்பிட்டது. இதைக் கண்ட லாரி ஓட்டுநா், தனது இருக்கையில் இருந்து எழுந்து லாரியில் பின் சீட்டில் அமா்ந்து கொண்டாா். சிறிது நேரம் கரும்பைத் தின்ற காட்டு யானை, பின்னா் அங்கிருந்து சென்றது. இதைத் தொடா்ந்து லாரி புறப்பட்டு சென்றது. வாகனங்களை யானை வழிமறித்ததால் ஆசனூா் - சத்தியமங்கலம் இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.