கூடலூரில் கடையடைப்பு போராட்டம்
கூடலூரில் வன விலங்குகளின் தாக்குதலால் தொடா் உயிா் இழப்புகள் ஏற்படுவதைக் கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
வன விலங்குகளின் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், வன விலங்குகள் தாக்குதலால் மனித உயிா்கள் பலியாகும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வணிகா் சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், கூடலூா், பந்தலூா், தேவாலா, சேரம்பாடி , மசினகுடி , பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. ஆட்டோக்கள், ஜீப் ஓட்டுநா்கள் மற்றும் ஒரு சில தேயிலை தொழிற்சாலைகளும் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.
