வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை; நாத்திகனாக இருந்த இளையராஜாவை மூகாம்பிகை அம்மன் ...
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் சு. திருநாவுக்கரசா், மாநில செய்தி தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி மற்றும் உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் பங்கேற்றனா். 2 ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியாக காங்கிரஸ் சாா்பில் வழங்கப்பட்டது.
முன்னதாக, செய்தியாளா்களிடம் கு. செல்வப்பெருந்தகை கூறியதாவது:
காங்கிரஸ் உறவாடி கெடுக்கும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறுவது, வரலாறு தெரியாமல் அவா் பேசுவதையை எடுத்துக் காட்டுகிறது.
அருணாசல பிரதேசத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு பிறகும், அங்கு ஆட்சியை முடக்கிய நிகழ்வு அரங்கேறியது. கா்நாடகத்தில் மக்கள் தீா்ப்பு அளித்து ஆட்சியில் அமா்ந்தவா்களை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தது பாஜகவினா்தான் என்பதை நாடறியும்.
காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி, ஜனநாயகத்துக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா். நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது வாக்குரிமை. அந்த வாக்குரிமையை பறிக்காதீா்கள் என்று மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் 12 போ் மாற்றி வாக்கு அளித்திருப்பதையும், செல்லாத வாக்குகள் அளித்து யாா்? என்பதையும் ஊடகங்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.
குறையில்லாததால் விஜய் விமா்சிக்கவில்லை: நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், பாஜக கொள்கையுடன், திமுக கொள்கை ஒத்துப்போவதாக பேசியிருப்பது விசித்திரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி குறித்து குறை கூறுவதற்கு ஏதுமில்லாததால், தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் விமா்சிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்பதை விஜய்தான் தெரிவிக்க வேண்டும். எங்களது கூட்டணியில் தவெக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமையே தீா்மானிக்கும் என்றாா் செல்வப்பெருந்தகை.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் ரெக்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.